Friday, September 18, 2020

ஐக்கூ அந்தாதி எப்படி எழுதுவது,,?


 




ஐக்கூ அந்தாதி


ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.



ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி ஆகும்


அந்தாதி என்றால் உங்களுக்கு புரியும்படி எளிமையாகச்சொன்னால்

கிராமங்களில் சொல்வார்கள் அவனுக்கு அந்தமும் இல்லை ஆதியும் இல்லன்னு,,, அதாவது

அந்தம்+ ஆதி இரண்டும் சேர்ந்து அந்தாதி எனப்படுகிறது அந்தம் என்றால் தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி என்றால் முதல் என்று அர்த்தமாகும் ஆதிமுதற்கடவுள் என்றுக்கூட சொல்வோமே அதைப்போல,, அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும்

 அந்தாதி என்பதை ஐக்கூ ரென்கா என்றும் அழைப்பார்கள் ஒரு ஹைக்கூ எந்த சொல்லில் முடிகிறதோ அதே சொல்லை பயன்படுத்தி அடுத்த ஹைக்கூவை தொடங்க வேண்டும்


இன்னும் எளிமையாக பார்ப்போமா,,,, அதாவது இலங்கை வானொலியில் பாட்டுக்கு பாட்டு என்று ஒரு நிகழ்ச்சி போடுவார்கள் பிறகு அது சென்னைக்கும் வந்தது லலிதாவின் பாட்டுக்கு பாட்டுயென்று அதில் ஒருவர் பாடும் போது மணி அடிக்கும் அவர் எந்த எழுத்தில் முடித்தாரோ அந்த எழுத்திலிருந்து அடுத்தவர் பாடவேண்டும் இதுப்போலதான் அந்தாதி இனி எழுதலாமா,,,,


இதோ,,,முனைவர் வே.புகழேந்தி அந்தாதி கவிதை


ஆசைத்தம்பியின் கவிதைகள்

அர்த்தம் நிறைந்தவை

இலக்கிய மணம் வீசிடும்


வீசிடும் தென்றலும்

இரசித்துச் செல்லும்

மயில்கள் ஆடி களிக்கும்


களிக்கும் பொழுதில்

கற்பனை வேகமாய் சுரக்கும்

கவின்மிகு கவிதைப் பிறக்கும்


பிறக்கும்போதே யாரும் கவிஞனில்லை /

எழுதிப் பழகினால்

எண்ணம் நிறைவேறும்


நிறைவேறும் நிச்சயம்

அவர்தம் இலட்சியங்கள்

வாழ்க எம்மான் ஆசைத்தம்பி

*****

அடுத்து கவிஞர் வெங்கடாச்சலம் பூவேந்தன் அந்தாதி பார்க்கலாம்


ஒன்றாய் கூடுகிறது

ஒரே சத்தம் போடுகிறது

ஒற்றுமையின் பலம்


பலம் உள்ளவன்

படையில் வெல்கிறான்

எதிலும் துணிச்சல்


துணிச்சல் பிறக்க

துணைக்கு வர வேண்டும்

தன்னம்பிக்கை

*****


அடுத்த கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் அந்தாதி கவிதை


நெடுந்தூரம் பயணம்

சற்றே இளைப்பாறுகிறது

கடலின் மேல் பறவை


பறவையின் கிறீச்சிடல்

உயர்ந்துக்கொண்டே வருகிறது

செல்பேசி கோபுரம்


கோபுரம் உச்சி

சரிந்து கீழே விழுகின்றது

மாலைநேர நிழல்


நிழல் தேடும் மனிதன்

கையில் ஏந்தியுள்ளான்

இரும்புக் கோடாரி


கோடாரி முனை

பட்டதும் தெறித்து விழுகிறது

மரப்பட்டையிலிருந்து புழு


புழு நெளியும் உணவு

தூக்கி எறிகிறான்

புழுவை மட்டும்

****

சமக்கால கவிஞர்களையும் உதாரணமாக எடுத்துக்கொண்டு பயன்படுத்திய கவிதையை வாசித்து இதேப்போல நீங்களும் எழுதுங்கள் கவிஞர்களே,,,


என்னுடைய ஐக்கூ அந்தாதி கவிதைகள் ;


சோறு குறைவுதான்

கூட்டத்தை அழைத்தது

காகம்,,,!


காகம் கரைந்தும்

வருவோர் யாருமில்லை

மரத்தடி பிச்சைக்காரன்,,,!


பிச்சைக்காரன் குரல்

காதில் கேட்பதில்லை

பணக்காரன் வீடு,,,!


வீடு காலியானது

அனாதையாய்

ஆணி,,,!


இப்படியாய் சுருக்கமாக சொன்னால் எந்த எழுத்தில் அல்லது வார்த்தைகளில் கவிதை முடிகிறதோ அதை முதல் எழுத்தாக அல்லது வார்த்தையாக வைத்து அடுத்த கவிதையை புனைவதுதான் அந்தாதி எனப்படுகிறது


நான் முடியும் வார்த்தைகளில் இருந்து தொடங்கியிருக்கிறேன் இதற்கு பெயர் ஐக்கூ அந்தாதி எனப்படும்


ஒரு திரைப்படத்தில்கூட அந்தாதி முறையில் புகழ்பெற்ற ஒரு பாடல் உண்டு (பாலச்சந்தர் படம்)


வசந்தக்கால நதிகளிலே

வைரமணி நீரலைகள்/


நீரலைகள் மீதினிலே

நெஞ்சிரண்டின் நினைவலைகள்/


நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்/


கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்/


இப்போது நன்றாக புரியுதா கவிஞர்களே,,,சரி


நீங்களும் முயற்சிக்கலாமே,,,


நாகை ஆசைத்தம்பி


6 comments:

  1. ஆசைதம்பி ஐயாவின் ஹைக்கூ அந்தாதி பற்றிய தகவல் அருமை...காத்திருக்கிறேன் நாளை உங்கள் மற்றோரு தலைப்பை எண்ணி...

    ReplyDelete
  2. மிக அருமையான விளக்கங்கள்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறப்பான எடுத்துக்காட்டுகள்...தொடர்க...

    ReplyDelete