Saturday, September 19, 2020

மோனைக்கூ கற்போமா,,,!


 மோனை என்பது கவிதையின் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.


எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.


ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.


ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்


உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.


ஒரு கவிதையில் முதல் வரியில் அ என்ற எழுத்துவந்தால் இரண்டாவது வரியில் அ என்ற எழுத்தே வரவேண்டுமென அவசியம் இல்லை அதே ஒலியுடைய அ,ஆ,ஐ,ஔ இந்த எழுத்துகளும் வரலாம் அதேப்போல ஒரு கவிதை இ என்ற எழுத்தில் ஆரபித்தால் அடுத்த வரி இ என்ற எழுத்தில் வர வேண்டுமென அவசியமில்லை அதே உச்சரிப்புள்ள இ.ஈ.எ.ஏ போன்ற எழுத்துகளும் வரலாம் அதேப்போல உ,ஊ ஒ,ஓ போன்ற எழுத்துகளையும் மோனையில் பயன்படுத்தலாம் ஆனால் அதே எழுத்து வந்தால் பார்க்கவே அழகாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்


மெய்யெழுத்திலும் மூன்று இனங்கள் உண்டு மோனையில் பயன்படுத்துவதற்கு ஞ்,ந் ஒரு இனம் ம்,வ்,ஒரு இனம் த்,ச்,என்பது ஒரு இனம் இப்படியும் பயன்படுத்தலாம்

இதேப்போலதான் எதுகைக்கூ என்பதும் ஒரு கவிதையில் இரண்டாவது எழுத்து மூன்று வரிகளிலும் ஒரே எழுத்தாக வந்தால் அது எதுகைக்கூ எனப்படும்

இல்கியம் என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது எதுகை,மோனை ஆகும்


அந்த மோனையை வைத்து ஹைக்கூ எழுதுவதே மோனைக்கூ எனப்படும் இதற்கு பெரிசா ஒன்றும் விளக்கம் தேவை இல்லை கீழ்காணும் என் கவிதையை பாருங்கள் புரியும்


இதோ என் மோனைக்கூ


குட்டாமலே

குனிந்துவிடுகிறது

குடிக்காரன் தலை,,,!


பருவநிலை மாற்றம்

பரிதாபமாக இருக்கிறது

பயிர்காய்ந்த வயல்கள்,


தண்ணீர் பற்றாக்குறை

தரிசாய் கிடக்கிறது

தமிழக விவசாயம்,


அரசியல்வாதிகள்

அடிக்கடி விடுகின்றனர்

அறைக்கூவல்,


~நாகை ஆசைத்தம்பி


Friday, September 18, 2020

ஐக்கூ அந்தாதி எப்படி எழுதுவது,,?


 




ஐக்கூ அந்தாதி


ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.



ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி ஆகும்


அந்தாதி என்றால் உங்களுக்கு புரியும்படி எளிமையாகச்சொன்னால்

கிராமங்களில் சொல்வார்கள் அவனுக்கு அந்தமும் இல்லை ஆதியும் இல்லன்னு,,, அதாவது

அந்தம்+ ஆதி இரண்டும் சேர்ந்து அந்தாதி எனப்படுகிறது அந்தம் என்றால் தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி என்றால் முதல் என்று அர்த்தமாகும் ஆதிமுதற்கடவுள் என்றுக்கூட சொல்வோமே அதைப்போல,, அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும்

 அந்தாதி என்பதை ஐக்கூ ரென்கா என்றும் அழைப்பார்கள் ஒரு ஹைக்கூ எந்த சொல்லில் முடிகிறதோ அதே சொல்லை பயன்படுத்தி அடுத்த ஹைக்கூவை தொடங்க வேண்டும்


இன்னும் எளிமையாக பார்ப்போமா,,,, அதாவது இலங்கை வானொலியில் பாட்டுக்கு பாட்டு என்று ஒரு நிகழ்ச்சி போடுவார்கள் பிறகு அது சென்னைக்கும் வந்தது லலிதாவின் பாட்டுக்கு பாட்டுயென்று அதில் ஒருவர் பாடும் போது மணி அடிக்கும் அவர் எந்த எழுத்தில் முடித்தாரோ அந்த எழுத்திலிருந்து அடுத்தவர் பாடவேண்டும் இதுப்போலதான் அந்தாதி இனி எழுதலாமா,,,,


இதோ,,,முனைவர் வே.புகழேந்தி அந்தாதி கவிதை


ஆசைத்தம்பியின் கவிதைகள்

அர்த்தம் நிறைந்தவை

இலக்கிய மணம் வீசிடும்


வீசிடும் தென்றலும்

இரசித்துச் செல்லும்

மயில்கள் ஆடி களிக்கும்


களிக்கும் பொழுதில்

கற்பனை வேகமாய் சுரக்கும்

கவின்மிகு கவிதைப் பிறக்கும்


பிறக்கும்போதே யாரும் கவிஞனில்லை /

எழுதிப் பழகினால்

எண்ணம் நிறைவேறும்


நிறைவேறும் நிச்சயம்

அவர்தம் இலட்சியங்கள்

வாழ்க எம்மான் ஆசைத்தம்பி

*****

அடுத்து கவிஞர் வெங்கடாச்சலம் பூவேந்தன் அந்தாதி பார்க்கலாம்


ஒன்றாய் கூடுகிறது

ஒரே சத்தம் போடுகிறது

ஒற்றுமையின் பலம்


பலம் உள்ளவன்

படையில் வெல்கிறான்

எதிலும் துணிச்சல்


துணிச்சல் பிறக்க

துணைக்கு வர வேண்டும்

தன்னம்பிக்கை

*****


அடுத்த கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் அந்தாதி கவிதை


நெடுந்தூரம் பயணம்

சற்றே இளைப்பாறுகிறது

கடலின் மேல் பறவை


பறவையின் கிறீச்சிடல்

உயர்ந்துக்கொண்டே வருகிறது

செல்பேசி கோபுரம்


கோபுரம் உச்சி

சரிந்து கீழே விழுகின்றது

மாலைநேர நிழல்


நிழல் தேடும் மனிதன்

கையில் ஏந்தியுள்ளான்

இரும்புக் கோடாரி


கோடாரி முனை

பட்டதும் தெறித்து விழுகிறது

மரப்பட்டையிலிருந்து புழு


புழு நெளியும் உணவு

தூக்கி எறிகிறான்

புழுவை மட்டும்

****

சமக்கால கவிஞர்களையும் உதாரணமாக எடுத்துக்கொண்டு பயன்படுத்திய கவிதையை வாசித்து இதேப்போல நீங்களும் எழுதுங்கள் கவிஞர்களே,,,


என்னுடைய ஐக்கூ அந்தாதி கவிதைகள் ;


சோறு குறைவுதான்

கூட்டத்தை அழைத்தது

காகம்,,,!


காகம் கரைந்தும்

வருவோர் யாருமில்லை

மரத்தடி பிச்சைக்காரன்,,,!


பிச்சைக்காரன் குரல்

காதில் கேட்பதில்லை

பணக்காரன் வீடு,,,!


வீடு காலியானது

அனாதையாய்

ஆணி,,,!


இப்படியாய் சுருக்கமாக சொன்னால் எந்த எழுத்தில் அல்லது வார்த்தைகளில் கவிதை முடிகிறதோ அதை முதல் எழுத்தாக அல்லது வார்த்தையாக வைத்து அடுத்த கவிதையை புனைவதுதான் அந்தாதி எனப்படுகிறது


நான் முடியும் வார்த்தைகளில் இருந்து தொடங்கியிருக்கிறேன் இதற்கு பெயர் ஐக்கூ அந்தாதி எனப்படும்


ஒரு திரைப்படத்தில்கூட அந்தாதி முறையில் புகழ்பெற்ற ஒரு பாடல் உண்டு (பாலச்சந்தர் படம்)


வசந்தக்கால நதிகளிலே

வைரமணி நீரலைகள்/


நீரலைகள் மீதினிலே

நெஞ்சிரண்டின் நினைவலைகள்/


நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்/


கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்/


இப்போது நன்றாக புரியுதா கவிஞர்களே,,,சரி


நீங்களும் முயற்சிக்கலாமே,,,


நாகை ஆசைத்தம்பி


Thursday, September 17, 2020

சென்ரியு எழுதலாம் வாங்க,,,


 


ஹைக்கூ கவிதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன சென்ரியு கவிதைகள்?இது ஒரு நவீன ஹைக்கூ

ஹைக்கூவில் மானுடம் பற்றி ஏதேனும் குறிப்பிருந்தால் அதை சென்ரியு என்று சொல்கிறார்கள்.இதன் இலக்கணம் என்ன தெரியுமா?ஆழமற்றது;வேடிக்கையானது.விடுகதை போன்றது.நகைச்சுவையானது;பொன்மொழி போன்றது.இவ்வகைக் கவிதைகளைத் திரட்டியவர் பெயர் காராய்ஹச்சிமோன் சென்ரியு
இவர் கி.பி 18நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார் அவரின் புனைப்பெயர் சென்ரியு அவரின் புனைப்பெயரிலையே இக்கவிதை அழைக்கப்படுகிறது

ஹைக்கூவுக்கான இலக்கணமும் கவித்துவமும் இல்லாமால் நகைச்சுவை உணர்வு மேலோங்கி ஒரு விசயத்தை கிண்டலாக சொல்லும் விசயமே சென்ரியுவாகும் நம்ம நண்பர்கள் சொல்வார்களே,,,,,,, நீ மனுசனே இல்லடான்னு  நிறுத்தி பிறகு தெய்வம் என்பார்களே அதுப்போலதான்,,,,

தமிழில் சென்ரியு வகைக் கவிதைகளை ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதி ''ஒரு வண்டி சென்ரியு''என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அதிலிருந்து நான் ரசித்த சில கவிதைகள்:

''தொகுதிதான்
முடிவாகவில்லை.
தோல்வி முடிவாகிவிட்டது.''
*****
''ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்.
ஐம்பது வாக்குகள்.''
******
''சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்.''
******
''குடித்தவன்
குடலுக்குள்ளும்
மயங்கவில்லை மது.''
******
''சண்டைக்கோழி
வென்றாலும் தோற்றாலும்
பிரியாணி.''
******

என் சென்ரியு கவிதைகள்

இரண்டு லாரிகள் மோதல்
முகப்பில்
அம்மன் துணை,,,!

ஏழையின் கூந்தலுக்கு
எண்ணெய் இல்லை
அம்மனுக்கு நெய் அபிஷேகம்

சரஸ்வதி குடியிருக்க
வாடகை எவ்வளவு
நாக்கில்,,,!

முழு அடைப்பு
காவல்துறை இயங்கியது
பேருந்துக்கு பாதுக்காப்பளிக்க,,,!

~நாகை ஆசைத்தம்பி

Wednesday, September 16, 2020

லிமரைக்கூ என்றால் என்ன,,,?


 



லிமரைக்கூ  கற்போமா நட்பூக்களே,,,


                          மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத்தொடையமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா அல்லது லிமரைக்கூ என்பர் . இதன் இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு.


லிமரிக் என்னும் ஆங்கில வடிவமானது அதில் ஹைக்கூவையும் இணைத்து லிமரைக்கூ எனப்படுகிறது


எளிமையாகச்சொன்னால் முதல்வரியின் கடைசி வார்த்தையும் கடைசிவரியின் கடைசி வார்த்தையும் எதுகை மோனையில் வர வேண்டும் இதுவும் ஹைக்கூ மாதரியேதான் எழுதிப் பழகுங்கள் எழுத்தாளன் என்பவன் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் தேடல் உள்ளவரையே நம்மால் இயங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்


 லிமரைக்கூ கவிதையை தமிழுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் இதோ ஒருசில லிமரைக்கூ


இரண்டால் பெருக்கப்படும் ஆயுள்/

காதலில் விழுந்தால் பொய்யும் நிஜமாகும்/

நெஞ்சில் கூவும் குயில்


~ முனைவர் வே.புகழேந்தி




இதோ என் லிமரைக்கூ,,,


மழைநேரம் திறந்த கடை

சூடுப்பிடிக்கிறது வியாபாரம்

மான்மார்க் குடை,,,!


வாங்கி குவித்தான் வட்டி

ஒரே பிரசவத்தில் பிறந்தது

இரண்டு பெண்குட்டி,,,!


~நாகை ஆசைத்தம்பி


Tuesday, September 15, 2020

பழமொன்ரியு பழகலாம் வாங்க,,,


 பழமொன்ரியு கவிதை என்பது ஹைக்கூவில் ஒருவகையாகும் இது பழமொழிகளை பயன்படுத்தி  எழுதுவதாகும் ஜப்பானிய சென்ரியு கவிதையின் இலக்கணமும் நம் தமிழ் மொழியின் இலக்கணமும் இணைந்து வருவதே பழமொன்ரியு ஆகும்,,,


வேடிக்கை,விளையாட்டு, கிண்டல்,கேளி இவைகள் கலந்துச் சொல்வதே பழமொன்ரியு ஆகும் எளிமையாக சொல்லவேண்டுமானால் இதுவும் ஹைக்கூ மாதரியேதான் நமது பழமொழிகள் முன்னெடுத்து அதை வச்சு சமூக நிகழ்வுளை கலாய்ப்பதுதான் பழமொன்ரியு ஆகும் இதோ சில,,


தான் ஆடாவிட்டாலும்

தன் தசை ஆடும் உடனே

கொழுப்பைக் குறைக்க வேண்டும்


கழுதை கெட்டால் குட்டிசுவர்

கெடாமல் இருந்தால் அதுக்கு

பாராளுமன்றமா,,?


~ஈரோடு தமிழன்பன்

ஒரு கூடைப் பழமொன்ரியு


கற்றது கையளவு

கல்லாதது உலகளவு

தோல்வியுற்ற மாணவன்


~ இரா . இரவி


இதோ என் பழமொன்ரியு கவிதைகள்


பட்டகாலிலே படும்

கெட்டகுடியே கெடும்

கஜா புயல்,,,!


நோய்விட்டுப்போக

வாய்விட்டு சிரிக்க முடியல

வாடகை வீடு,,,!


வளர்த்தக்கிடா

மார்பில் பாயுது

பால் குடிக்க,,,!


ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்

அம்மா அலட்டிக்கொள்ளவில்லை

வீட்டிற்குள் மிக்ஸி,,,!


நீர் இடித்து நீர் விலகாது

நீருக்காக விலகிக்கொண்டது

அரசியல் கூட்டணி,,!


அகல உழுவதைவிட

ஆழ உழுவதே மேலானாது

இயந்திர கலப்பை,,,!


ஐந்தில் வளையாதது

ஐம்பதில் வளைந்தது

அரசியல் கும்பிடு,,,!



~ நாகை ஆசைத்தம்பி


Monday, September 14, 2020

ஹைக்கூ கவிதைக்கு படம் இணைத்து எழுதலாமா,,,?


 ஹைக்கூ கவிதைகள் எழுதி இணையத்தளங்களில் பதிவிடும்போது அதற்கு பொருத்தமான படம் இணைக்கலாமா,,,வேண்டாமா என்பது இங்கே நெடுநாளாக விவதாப்பொருளாக இருக்கிறது அது சம்மந்தமாக என்னுடைய பார்வையை நான் எழுதுகிறேன் இதுதான் விதி என நான் சொல்லவில்லை யாரையும் கட்டாயப்படுத்தவுமில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்


சாதாரணமாக ஒரு கவிதைக்கோ அல்லது கவிதை நூலுக்கோ ஓவியம் போடும்போது பென்சில் ஸ்கெச் ஆயில்பெயிண்டிங்க,,, மார்டன் ஆர்ட்

இப்படி பல வகைகளில் செய்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடிக்கிறது அந்த படம் போடுவதின் நோக்கமே அந்த புத்தகத்திலுள்ள படைப்புகளோ அல்லது அந்த புத்தகத்தின் தலைப்போ வாசகர்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பதற்காகதான் படமே போடாமல் புத்தகம் போட்டால் யாரும் வாங்கமாட்டார்கள் அதுப்போலதான் ஒரு ஹைக்கூ எழுதும்போது அதற்கு பொருத்தமான படம் இணைத்தால் அது வாசகர்களை எளிதில் சென்றடைய வாய்ப்பு அதிகமாகும் முகநூல்களில்கூட படம் இணைக்கும் கவிதையை அதிகமனோர் பார்வையிடுகின்றார்கள் அதற்குக்கூட சிலர் விதாண்டாவாதம் செய்யலாம் அது கவிதைக்காக அல்ல படத்துக்காகன்னு,,அது உண்மையல்ல என்பது என் கருத்து ஏனென்றால் படம் இணைக்கும்போது அது வாசகர்களுக்கு உடனே புரிவதால் அதிகமானோர் பார்வையிடுவதாக நான் நினைக்கிறேன் இன்னும் நாம் அந்தக்காலத்திலே இருந்தால் ஹைக்கூ கவிதைகளை வளர்தெடுக்கமுடியாது


அந்தக்காலத்தில் அம்மியில் அரைத்துதான் குழம்பு வைத்தார்கள் இப்போது குழம்பு பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கிறது  இப்போதும் அம்மியில் அரைத்த குழம்பே வேண்டுமென்றால்(பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா,,,) பட்டனியாகதான் இருக்க வேண்டும் முன்பெல்லாம் புலவர்கள் மட்டுமே கவிதை எழுதி வந்தார்கள் அதை உடைத்து தேமாங்கா புளிமாங்கா எதுவும் வேண்டாமென. கவிஞர் மு.மேத்தா அவர்கள் நம்மையெல்லாம் கவியெழுத வைக்கவில்லையா அதுப்போலதான் படம் இணைத்து ஹைக்கூ எழுதுவதால் எளிதாக வாசிப்பவன் புரிந்துக்கொள்ளமுடியும் என்பதே என் கருத்து இக்கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்டாயமல்ல எனக்கு தோன்றியதை நான் சொல்கிறேன்


கவிதைகளுக்கு அது சொல்லும் கருத்துதானே முக்கியம் படம் இணைப்பதெல்லாம் அபத்தம் என்றுக்கூட சொல்கிறார்கள் கருத்து முக்கியம்தான் அதை சொல்லும் விதம் மாற வேண்டும் அல்லவா,,,ஒரு திரைப்படம் பார்க்கிறோம் அதன் கருத்துதானே முக்கியம் என ஆடியோவா பதிவு செய்து வெளியிட்டால் மக்களை சென்றடையுமா,,,அடையாது

அந்த கருத்தும் மக்களை சென்றடைய நடிகர்களை நடிக்க வைத்து வீடியோ செய்யப்படுகிறது அதோடு மட்டுமல்ல அந்த கருத்தை சொல்லக்கூடிய நடிகரும் அதற்கு பொருத்தமானவராக இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அதுப்போலதான் எந்த படைப்பும் மக்களை சென்றடைய சில யுத்திகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது என் கருத்து அக்கருத்து நமது இலக்கியமான ஹைக்கூ கவிதைகளுக்கும் பொருந்தும் இதை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் தூற்றுபவர்கள் தூற்றலாம்,


இதோ சில ஹைக்கூ கவிதைகள் நீங்களும் இரசிக்கலாம்,,,


உயிருக்காக

போராடிக்கொண்டிருக்கிறது

சவப்பெட்டிக்குள் ஈ


~கருமலை பழம் நீ


தானியம் தூவும்

வேடனின் கைகள்

வலை விரிக்கும்


~கா ந.கல்யாணசுந்தரம்


நிலத்தடி நீர்

நிலைத்து நிற்கிறது

குளிர்பான நிறுவனம்


~ரேவதி (ஹைக்கூ தீவு)


கைக்கு எட்டியது

வாய்க்கு எட்டவில்லை

வாங்கிய கூலி


~சு.கேசவன்


காற்றே மெதுவாய் வீசு

கிளையில்

குருவிக்கூடு


~பா.உதயகண்ணன்

(கிண்ணம் நிறைய ஹைக்கூ)


விதவை வானம்

மறுநாளே மறுமணம்

பிறை நிலவு


~இரா.இரவி

(வேரில் பூத்த ஹைக்கூ)


உலர்ந்து விட்டது

ஆற்றைக் கடந்ததும்

பறவையின் நிழல்


~முனைவர் புகழேந்தி

(சரம் சரமாய் ஹைக்கூ)


ஊரைக் காக்கும் காளி

கூடவே வருகிறது

பாதுகாப்பு படை,,,!


~சீனு செந்தில்

(ஹைக்கூ 2020)


ஒப்பனைக்காக

விற்பனை செய்யப்படுகிறது

கற்பனைகள்


~நாகை ஆசைத்தம்பி

(எரிதழல்)


காலணிகள் பலரகம்

பேதம் பார்ப்பதில்லை

தாங்கும் நிலம்


~தர்மசிங்

(சரம் சரமாய் ஹைக்கூ)


பக்தனுக்கு பசி

யாசகம் கேட்கிறார்

சாலை ஓவியக் கடவுள்


~விக்டர் ஏஞ்சல்

(சரம் சரமாய் ஹைக்கூ)


உழைக்கும் தொழிலாளி

சுகமாகவே வாழ்கிறார்

பிழைக்கும் முதலாளி


~மாதவன்

(சுகமூட்டிய அந்த நிழல்)


இக்கட்டுரையில் வருவதெல்லாம் என் சொந்தக்கருத்துதான் இதைப்பின்னபற்ற வேண்டுமென கட்டாயமல்ல அது உங்கள் பார்வையைப்பொருத்தது,,,



~நாகை ஆசைத்தம்பி

Sunday, September 13, 2020

ஹைக்கூ பழகலாம் வாங்க,,,

ஹைக்கூ என்றால் என்ன அதை எப்படி எழுதுவது என்பதையும் அதன் வரலாறையும் சுருக்கமாக பார்க்கலாம்

16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானில் ஹைக்கூ கவிதைகளை வளர்த்தெடுத்த பெருமை பாஷோ,பூஸன்,இஷா,ஷிகி ஆகிய கவிஞர்களையே சேரும் அதன்பிறகு முதன்முதலாக ஹைக்கூ கவிதையை தமிழுக்கு அறிமுகம் செய்கிறார் பாரதியார் அதன்பிறகு எழுத்தாளர் சுஜாதா அவர்கள்  தமிழில் அதிகம் எழுதியும் மொழிப்பெயர்த்தும் ஹைக்கூ கவிதைகளை வளர்த்தார் பிறகு கவிக்கோ அப்துல் ரகுமான் ,ஈரோடு தமிழன்பன் மற்றும் மு.முருகேஷ் ஆகியோர் ஹைக்கூ கவிதைகளுக்காக உழைத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ் முதல் ஹைக்கூ தொகுப்பு நூல் கிண்ணம் நிறைய ஹைக்கூ நூலாக கருதப்படுகிறது அந்த நூலை தொகுத்தவர் மு.முருகேஷ் அந்த நூலில் என் கவிதையும் உண்டு அதனால் எனக்கும் பெருமையே அவர் அடுத்து தொகுத்த வேரில் பூத்த ஹைக்கூ இந்த நூலிலும் என் கவிதைகள் இருக்கிறது இப்படியாய் என் நீண்ட ஹைக்கூ பயணம் தொடர்கிறது மு.முருகேஷ் அவர்களை தவிர்த்து ஹைக்கூ வரலாறு எழுதமுடியாது இன்னும் அறிவுமதி,அமுதபாரதி,ந.முத்துக்குமார்,கா.ந.கல்யாணசுந்தரம்,இளையபாரதி,அனுராஜ், நாகை சைத்தம்பியாகி நான் போன்றவர்கள் முகநூல் மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும் ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்கு உழைக்கின்றோம் பெங்களுருவை சேர்ந்த முனைவர் புகழேந்தி அவர்கள் ஹைக்கூ கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டு ஹைக்கூ கவிதைகளுக்கு சிறப்பு செய்கிறார்

இன்று அக்கவிதையை பல ஆயிரக்கணக்கான கவிஞர்கள் எழுதுகிறார்கள் தமிழில் ஆயிரக்கணக்கான நூல்களும் வந்துவிட்டது ஒரு பெரிய விசயத்தை எளிமையாகவும் வீரியமாகவும் சொல்வதால் எல்லோரும் ஹைக்கூ கவிதைகளை விரும்பி படைக்கின்றார்கள் எனலாம் இனி,,,எப்படி எழுதுவதென்பதை பார்ப்போம்

1.  ஹைக்கூ மூன்று  வரியாக  இருக்க  வேண்டும்.2.  ஹைக்கூவுக்குத்  தலைப்பிட்டு  எழுதக்  கூடாது.  ஒரு  ஹைக்கூவிற்கு இரண்டுக்கு  மேற்பட்ட  அல்லது  குறைந்த  பட்சம்  இரண்டு  உட்கருத்தாவது இருக்க  வேண்டும் ஹைக்கூவில்  நாம்  கடைபிடிக்க  வேண்டிய  மூன்று  முக்கிய  மரபுகள்  உண்டு

      ஹைக்கூவில்  முதல்  அடி  ஒரு  கூறு.  ஈற்றடி  ஒரு  கூறு. ஹைக்கூவின்அழகும்  ஆற்றலும்  ஈற்றடியில்தான்  உள்ளது.  ஈற்றடி  ஒரு  திடீர்வெளிப்பாட்டை,  உணர்வு  அதிர்ச்சியை  ஏற்படுத்தி  முழுக்  கவிதையையும் வெளிச்சப்படுத்த  வேண்டும்.

     மற்றொரு  மரபு  ஹைக்கூவின்  மொழி  அமைப்பு.  ஹைக்கூவின்  மொழி  சிக்கனமாக  தந்தி  மொழியைப்  போல்,  எளிமையான குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் அவசியமற்ற  இணைப்புச்  சொற்களைவிட்டு  விட  வேண்டும்.

      உயிர்  நாடியான  ஈற்றடியில்  ஆற்றல்  மிக்க  வெளிப்பாட்டிற்காக பெயர்ச்  சொல்லையே  பயன்படுத்த  வேண்டும்.மேற்கண்டவற்றை  ஹைக்கூப்  படைப்பாளர்கள்  கடைபிடிக்க  வேண்டும்.ஏனென்றால்  ஹைக்கூவின்  அடையாளமும்,  அழகும்,  ஆற்றலும்  இவற்றில்தான் இருக்கின்றன.
ஹைக்கூ  வாசிப்பு  முறை ஹைக்கூவை  முறையாக  எப்படி  வாசிக்க  வேண்டும்  என்ற  புரிதல்  ஹைக்கூ எழுதுபவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் இரண்டு வரிகளை வாசித்து முடித்து பிறகு முதல் வரியிலிருந்து இரண்டு வரிகளையும் வாசித்து சிறிது நிறுத்தி மூன்றாவது வரியை வாசிக்க வேண்டும் இதுவே கேட்பவர்களுக்கு எதிர்பார்ப்பை உண்டுபன்னும் இது கவியரங்கில் வாசிப்பதற்கு உதவும்

 அப்படிப்  படிக்கும்  போது  அந்த  இறுதி  அடி  எதிர்பாராதத்திருப்பம்  கொண்டதாக  இருக்க  வேண்டும்.  அந்த திருப்பம் அந்த கவிதையோடு சம்மந்தப்பட்டதாகவே இருக்க வேண்டும் இப்போது ஹைக்கூ  எழுதுபவர்கள் இந்த  எளிமையான  முறையை  மட்டுமே  கடைபிடித்தால்  கூட  அவர்கள்  எழுதும் ஹைக்கூவை  மேலும்  சிறப்பாகப்  படைக்க  முடியும்

இன்றைய அவசர உலகில் ஹைக்கூ கவிதைகளை நேரம் மிச்சம் செய்கிறது நீங்கள் சொல்லவேண்டிய செய்தியை மிக குறுகியக் காலத்தில் மூன்றே வரிகளில் சொல்லி முடித்துவிடலாம் அது உங்களுக்கும் நல்லது வாசிப்பவருக்கும் நல்லது எனவே ஹைக்கூவை நல்லமுறையில் எழுதி நல்ல கவிஞராக வலம் வாருங்கள்

இதோ சில ஹைக்கூ,,,,,

பூசாரி கையில் கட்சி
வெளியேற்றப்பட்டார்
கடவுள்,,,!

~ ஈரோடு தமிழன்பன்
ஒரு வண்டி சென்ரியு

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடி,,,

~ ந.முத்துக்குமார்

ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது
எடை குறைவாய்

~ ந.முத்து
எடை குறைவாய்,,,ஹைக்கூ நூல்

பக்கத்து வீட்டில் கலர் டீவி
கறுத்துப்போகிறது
என் முகம்

~மு.முருகேஷ்
கிண்ணம் நிறைய ஹைக்கூ

சின்னத்திரை
நம்மை சிறைப்படுத்துகிறது
வீட்டுக் காவலில் தேசம்

~கா.ந.கல்யாணசுந்தரம்
வேரில் பூத்த ஹைக்கூ

அதிக விளைச்சல்
விரைவாகக் கிடைக்கிறது
ஒட்டுச் செடிகள்

~கவிநிலா மோகன்

வாசலில் பிச்சைக்காரர்
உள்ளேயிருந்து குரல்
வீட்டில் ஆளில்லை

~நாகை ஆசைத்தம்பி
எரிதழல் ஹைக்கூ நூல்
கிண்ணம் நிறை ஹைக்கூ

தொடர் மழை
காய்ந்துக் கிடக்கிறது
யாசகனின் வயிறு

~அன்ஸார் எம் எல் எம்

பேருந்து நிற்கவில்லை
இன்னும் காத்திருக்கிறது
சாலையோர நிழற்குடை

~வதிலை பிரபா
கிண்ணம் நிறைய ஹைக்கூ



ஆக்கம் ~நாகை ஆசைத்தம்பி