Saturday, September 12, 2020

ஹைக்கூவில் ஈற்றடியில் ஏன் பெயர்ச்சொல் வேண்டும்,,,?


 

ஹைக்கூ எழுதும் போது ஈற்றடியில் பெயர்ச்சொல்லையே பயன்படுத்துவது சிறப்பாகும் சரி பெயர்ச்சொல்லென்றால் என்ன,,,?

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல் பொருள் ,இடம் ,காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவார்"பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது."

பொருட்பெயர்: மனிதன், பசு, புத்தகம்

இடப்பெயர்: கோவை, தமிழகம்

காலப்பெயர்: மணி, நாள், மாதம்,ஆண்டு

சினைப்பெயர்: கை, தலை

பண்புப்பெயர்:
இனிமை, நீலம், நீளம், செவ்வகம்

தொழிற்பெயர்: படித்தல், உண்ணல், உறங்குதல்

இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு

ஒன்றின் பெயரை உணர்த்து சொல் பெயர்ச்சொல் எனப்படும் அது இடுக்குறிப்பெயராகவோ அல்லது காணப்பெயராகவோ இருக்கலாம்

இடுக்குறி என்பது எந்த காரணமும் இல்லாமல் இட்டு வழங்கியப்பெயர்  அதாவது மண்,மலை.மரம் போன்றவை
காணப்பெயர் என்பது காரணத்தோடு இட்டு வழங்கியப்பெயர் நாற்காலி, முக்காலி , போன்றவையாகும்

ஹைக்கூ கவிதைகளுக்கு முதல் வரியும் கடைசிவரியும் மதிக்கப்படுவதற்கு இடையிலுள்ள இரண்டாம் வரி மிகமுக்கியமானதாகும் என்றாலும் ஈற்றடியில் பெயர்ச்சொல்லை பயன்படுத்தவதே சிறப்பாக அமையும் அப்படியான ஹைக்கூ கவிதைகளே காலத்தை கடந்தும் நிலைக்கும் உங்களுக்கு புகழைப்பெற்றுத்தரும் என்பதை கருத்தில்கொண்டு கவிஞர்கள் ஹைக்கூ கவிதைகளை படைக்க வேண்டும்
இதோ சில கவிதைகள்

மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில்
புதிதாக முளைக்கிறது
அலைபேசி கோபுரம்,,,!

~நாகை ஆசைத்தம்பி

பூந்தோட்டங்களை
அழித்துவிட்டு வளர்க்கிறார்
தேனீக்கள்

~மா.ஷங்கர்

கோவில் வாசலில்
பக்தரை நம்புகிறான்
பிச்சைக்காரன்

~அன்பழகன்.ஜி

விளக்கை நகர்த்த
அசைந்து கொடுக்கிறது
புத்தரின் நிழல்

~கா.ந.கல்யாணசுந்தரம்

உழவனின் உழைப்புக்கு
தலை வணங்குகிறது
நெல்மணிகள்

~விக்டர் ஏஞ்சல்

மீன்கள் விற்றதும்
இறந்து கிடக்கிறது
மீன்தொட்டி

~தஞ்சை தக்ஷன்

மேற்கு தொடர்ச்சிமலை
இடைவெளிவிட்டு கூவிடும்
கானக்குயில்

~முனைவர் .வே.புகழேந்தி

Friday, September 11, 2020

முக்கியத்துவம் பெற்ற என் முதல் ஹைக்கூ


 இந்த கட்டுரையில் முக்கியத்துவம் பெற்ற என் முதல் ஹைக்கூவைப்பற்றி எழுதுகிறேன் இது என்னைப்பற்றி புகழ்ந்து சொல்வதற்கல்ல இளையவர்கள் புரிந்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே


நான் 1993ல்தான் முதன்முதலாக ஹைக்கூ எழுதுகிறேன் அந்த ஆசைக்கு காரணம் நண்பர் மு.முருகேஷ் அவர்களே,,,அவர் அப்போதெல்லாம் தீக்கதிர் பத்திரிக்கை மற்றும் செம்மலர் ஏழைதாசன் போன்ற இதழ்களில் ஹைக்கூ எழுதுவார் அதை வாசிக்கும் போது ஏதோ ஒரு உணர்வு ஏற்படும் அப்போது இதுதான் ஹைக்கூ என்பதோ இது ஜப்பானிய இறக்குமதி என்பதோ இதன் பிதாமகன் யார் என்பதோ எதுவும் தெரியாது வாசித்தால் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு வருகிறது அதனால் நாமும் எழுத வேண்டுமென முயற்சிசெய்தேன் அப்போது முதன்முதலாக எழுதிய ஹைக்கூ கவிதைதான்,,,


இரண்டு லாரிகள் மோதல்

முகப்பில்

அம்ன் துணை,,,!


என்ற ஹைக்கூ,, இந்த ஹைக்கூ

எழுதி உடனே பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நடத்திவரும் உல்லாச ஊஞ்சல் என்ற மாத நாவலுக்கு அனுப்பி வைத்தேன்

என்ன ஒரு ஆச்சர்யம் அந்த ஹைக்கூ பிரசுமாகியிருந்தது

அதோடு பெரிய ஆச்சர்யம் அந்த கவிதைக்கு சன்மானமாக 15ரூபாய் மணிஆர்டரும் வந்தது  அன்று நான் அடைந்த ஆனந்தம் எழுத்துகளில் வடிக்கமுடியாது அது உணர்வு ரீதியானது


அதன் பிறகு அந்தக்கவிதை மு.முருகேஷ் அவர்களின் தொகுப்பில் வெளியான கிண்ணம் நிறைய ஹைக்கூ என்ற தொகுப்புநூலிலும் இடம்பிடித்தது அந்த நூலை விமர்ச்சனம் செய்த தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் தோழர் அ.குமரேசன் அவர்கள் இதுப்போன்ற பகுத்தறிவு சிந்தனைகள் இந்நூலில் நிரம்பிக்கிடக்கிறது என என் ஹைக்கூவை மேற்கோள் காட்டியிருந்தார் அதன் பிறகு அக்கவிதை ஏழைதாசன் இலக்கிய இதழிலும் வெளிவந்தது


ஏழைதாசன் இலக்கிய இதழை வாசித்த பிரபல விஞ்ஞான எழுத்தாளர் மறைந்த சுஜாதா அவர்களின் கண்ணில் அக்கவிதை பட்டுவிட,,,சுஜாதா அவர்கள் அந்த ஹைக்கூவை ஆனந்த விகடனில் அவர் தொடராக எழுதிய கற்றதும் பெற்றதும் என்ற கட்டுரையில் மேற்கோள் காட்டியிருந்தார் அது எனக்கு மிகுந்த பெருமையாக இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா,,,?  அதன்பிறகு அதே கவிதையை சுப. வீரபாண்டியன் அவர்களின் தமிழ் சான்றோர் பேரவை என்ற அமைப்பின் தகவல் பலகைகளில் கோவையில் எழுதி வைத்து மக்களிடம் சேர்த்தார்கள் இப்படி என் முதல் ஹைக்கூவே முக்கியத்துவம் பெற்றது அன்றையிலிருந்து எனக்கான தனித்துவத்தோடு நான் எழுதுகிறேன் ஒரு கவிதையை வாசிப்பவர்கள் அந்த கவிஞரின் பெயர் இல்லாவிட்டாலும் இது அவருடைய கவிதைதான் என அடையாளம் காணும் அளவுக்கு தனக்கான தனித்துவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்  கவிதை என்பது எழுதுவதல்ல,,,எழுவது ஆம்,,,யோசியுங்கள்,,,யோசிக்கிறேன்,,யோசிப்போம்,


நாகை ஆசைத்தம்பி

ஹைக்கூவில் திருப்பம் உங்கள் விருப்பமா,,,?!

 இனிய ஹைக்கூ கவிஞர்களே கடந்த கட்டுரையில் நல்ல ஹைக்கூவை மேலிருந்து கீழாக படித்தாலும் கீழிருந்து மேல் நோக்கி படித்தாலும் பொருள் மாறாமல் இருக்க வேண்டும் அதுவே நல்ல ஹைக்கூ என்பதை பார்த்தோம் அதற்கு நல்ல ஆதரவு இருந்தது இன்று நாம் காணப்போவது ஹைக்கூவில் திருப்பம் பற்றியதுதான்,,,


ஹைக்கூ கவிதை என்றால் மூன்று வரிகளை உடையது என்பதை எல்லோரும் புரிந்துக்கொண்டார்கள் ஆனால் திருப்பம் என்பதை இன்னும் பலர் புரிந்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது நமது கிராமங்களில் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம் என்பார்கள் அதுப்போலவே திருப்பம் என்பதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டு சம்மந்தமில்லாமல் எழுதுவார்கள் அதற்கு உதாரணம் காட்டமுடியும் ஆனால் அவர்கள் மனசு காயமடையும் என்பதால் அதை தவிர்க்கிறேன்


ஹைக்கூ என்பது மூன்று வரிகளில் எழுதும்போது இரண்டு வரிகள் முடிந்து மூன்றாவது வரி எழுதும் போது ஒரு திருப்பம் வைக்க வேண்டும் அது வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் ஆனால் அந்த திருப்பம் அந்த கவிதையோடு சம்மந்தம் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லது முதல் வரிக்கும் கடைசி வரிக்கும் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் அதுவே சிறப்பாக இருக்கும் அப்படி இல்லாமல் நானும் பட்டாளத்துக்கு போகிறேன் என்பதுபோல துளியும் பொருத்தமில்லாத அந்த கவிதையின் பொருளையே மாற்றக்கூடிய திருப்பம் வைப்பது உங்கள் கவிதையை நீங்கள் ரசிக்க சரியாக இருக்கும் அடுத்தவருக்கு உங்கள் திருப்பம் வெறுப்பாகிவிடும் இனிமேல் திருப்பம் வைக்க வேண்டுமானால் அந்த கவிதையின் பொருள் மாறாமல் அதோடு சம்மந்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்துங்கள் கவிஞர்களே


இதோ சில கவிஞர்களின் கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் பாருங்கள் பழகுங்கள் எழுதுங்கள்,,,


பயணிகள் கரையேறிவிட்டனர்/

படகோட்டி ஓய்வெடுக்கிறான்/

படித்துறையில் தத்தளிக்கிறது படகு/


திரைப்பட இயக்குனர் 

பிருந்தா சாரதி அவர்களின் ஹைக்கூ இந்த கவிதையை பாருங்கள்  படகுத்துறையை சுற்றியே வருகிறது  இப்படியான திருப்பங்கள் வைத்தால் பொருள் மாறாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே,,,


அடுத்து ஒரு கவிதை காண்போம்


மிதித்திடக் கால் கூசுகிறது

மிதியடியில் எழுத்துக்கள்

நல்வரவு


இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர்

ஓவியக்கவி அமுதபாரதி அவர்கள் இந்தக் கவிதையையும் பாருங்கள் வீட்டு வாசலிலே இருக்கிறது திருப்பம் வேண்டுமென்பதற்காக. வேறு எங்கோ போகவில்லை இப்படியான திருபங்களே கவிதையை ரசிக்க வைக்கும்  வேறு மாதரி எழுதினால் கவிதையை வெறுக்க வைக்கும் என்பதை உணருங்கள்


அடுத்து ஒரு ஹைக்கூ காண்போம்


வியர்வை மழையில்

நனைகிறது

புழுக்கம்


இந்தக்கவிதையை எழுதியவர் இனிய உதயம் இலக்கிய இதழின் இணையாசிரியர் ஆரூர் தமிழ் நாடன் அவர்கள் இந்தக்கவிதையும் பாருங்கள் கவிதையோடு சம்மந்தம் உள்ளதாக இருக்கும் வியர்வை புழுக்கம் சம்மந்தம்தானே இப்படியாக கவிதை இருப்பதே நலம் கவிஞர்களே,,,


இன்னும் சில கவிதைகளை காண்போம்


பழுத்த பழத்தின் வாசனை

அதிகம் கல்லடிபடுகிறது

உயர்ந்த மரம்


~ இளைபாரதி கந்தகப்பூக்கள்


மழை நின்றாலும் 

சத்தம் நிற்கவில்லை

தவளையின் குரல்


~ஜெயக்குமார் பலராமன்


தொழிற்சாலை புகை

வேகமாய் பரவுகிறது

தொற்று நோய்


~நாகை ஆசைத்தம்பி


பாலைவன தேசம்

வாழ்க்கையை நகர்த்துகிறது

ஒட்டகம் மேய்க்கும் கூலி


~உறையூர் மகேஷ்


கரை ஏறுவதற்காக

கடலில் இறங்குகிறான்

வலை வீசுபவன்

~ தர்மசிங்





என் இனிய கவிஞர்களே இனிமேல் திருப்பங்களை உங்கள் விருப்பத்திற்காக வைக்காதீர்கள் கவிதையோடு சம்மந்தமுள்ளதாக பொருள் மாறாமல் வைத்து நல்ல கவிஞராக வலம்வர வேண்டுகிறேன்,,,


நாகை ஆசைத்தம்பி


Thursday, September 10, 2020

நல்ல ஹைக்கூவை புரிந்துக்கொள்ள எளிய வழி

 100ஆண்டுகளை கடந்து பயணிக்கிறது ஹைக்கூ கவிதைகள் ஒருசிலர் அது ஜப்பானிய வடிவம் என சொன்னாலும் கவிஞர்கள் அவரவர் மொழியில் நமது பண்பாடு கலாச்சாரம் இவைகளை முன்னெடுத்து எழுதிவருவது சிறப்பாக இருக்கிறது ஆனால் ஒருசிலர் மூன்று வரிகள் இருந்தாலே அது ஹைக்கூதான் என்று புரிதல் இல்லாமல் எழுதுவதும் வருத்தமளிக்கிறது 5-7-5என்ற பார்மலாவை நாம் கடந்துவிட்டோம் என்றாலும் சிலர் குறுங்கவிதைப்போல எழுதி இடையிடையே மூன்று கோடுகளைப்போட்டு இதுவும் ஹைக்கூ என்பதோடு அதை எடுத்துச்சொல்லும் கவிஞர்களிடமும் சண்டைப்போடுவதுமுண்டு என்னுடைய நோக்கம் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதுதான் அந்த வகையில் ஹைக்கூ கவிதையிலும் அழகியலை மட்டும் சொல்லாமல் மக்களுக்கான கருத்தியல்களையும் விதைக்கலாம் 


ஒரு நல்ல ஹைக்கூவை மிக எளிமையாக எழுதுபவர்களே அடையாளம் காணலாம் நாம் எழுதிய ஹைக்கூவை கீழிருந்து மேலாக ஒருமுறை வாசித்துப்பாருங்கள் அப்போதும் நீங்கள் எழுதியப்படியே பொருள் தந்தால் அதுதான் நல்ல ஹைக்கூ என எனது ஆய்வில் உணர்ந்துள்ளேன் இனி ஹைக்கூ கவிஞர்கள் இந்த வழியை பின்பற்றலாமே,,,உதாரணமாக சில ஹைக்கூ கவிதைகளை கொடுத்துள்ளேன் அதையும் பாருங்கள் அந்த ஹைக்கூ கவிதைகளை மேலிருந்தும் கீழிருந்தும் வாசியுங்கள் பொருளும் மாறாது கவிதையும் மாறாது இப்படியான ஹைக்கூ கவிதைகளே நல்ல ஹைக்கூ என்பதை கவிஞர்களின் நலனுக்காக சொல்கிறேன்


மணவரை

மெதுவாய் பெருக்குகிறாள்

முதிர் கன்னி

               ~ அறிவுமதி


தொடர்ந்து நடக்கிறேன்

பாதை உருவாகிறது

பலர் நடக்கிறார்கள்

                    ~அமுதபாரதி


கறுத்த பெண்

புகுந்தகம் வந்தாள்

கலர் டீவி யோடு

                      ~ மு.முருகேஷ்


பொம்மை விற்பவனிடம்

தாராளமாய் உள்ளது

குழந்தை பாசம்

                    ~கா.ந.கல்யாணசுந்தரம்


கல்லறையில் மழை

புரண்டு படுக்கிறது

உதிர்ந்த சருகு

               ~ தக்ஷன்


பாசத்தையும் ஒப்படைத்து

வெறுங்கையுடன் திரும்புகிறாள்

வாடகை தாய்

                  ~முனைவர் புகழேந்தி


பலமுறை கீழே விழுந்தும்

முயற்சிப்பதை நிறுத்தவில்லை

சிலந்தி

                   ~அனுராஜ்


மரத்தின் கிளை

வெட்டியதும் கீழே விழுகிறது

குஞ்சுகளோடு கூடு

                     ~கவிநிலா மோகன்


மாட்டுத் தொழுவம்

நிரம்பி வழிகிறது

வைக்கோல்

                     ~சீனு செந்தில்


உள்ளே கடவுள்

ஒருமுறைகூட பார்க்கவில்லை

வாசலில் இருக்கும் யாசகர்

             ~மகிழ்நிலாவின் தந்தை


வழிப்பாட்டுத் தளங்கள்

நம்பிக்கையை விதைக்கிறது

கையேந்தும் பிச்சைக்காரன்

                 ~நாகை ஆசைத்தம்பி


திருமண நிகழ்ச்சி

அட்சதை விழுகிறது

புகைப்படகாரருக்கு

                   ~ஜெகன் ஆன்டணி







Monday, May 18, 2020

புலம்பெயர்ந்த தொழிலாளி

கடவுள்
அவ்வப்போது
மாறிக்கொண்டே இருக்கிறார்

பசியோடு இருப்பவனுக்கு
அரிசியும் காய்கறியும்
கொடுத்தவர்
கடவுளாகிறார்

மதுப்பிரியருக்கு
டாஸ்மாக்கை திறந்தவர்
கடவுளாகக் காட்சித்தருகிறார்

கார்ப்ரேட் கம்பேனிகளுக்கு
மோடி கடவுளாக தெரிகிறார்

இந்தப்படத்திலுள்ள
புலம்பெயரும் தொழிலாளிக்கு
இப்போது
ஊருக்கு அழைத்துச்செல்லும்
இந்த தொடர்வண்டியே
கடவுளாக,,,,

~ நாகை ஆசைத்தம்பி


Tuesday, May 12, 2020

என் அப்பன் எங்கே,,,?

மகளைப்பெற்றவனையெல்லாம்
மனமுடைந்து அழ வைக்கிறது
" என் அப்பன் எங்கே" என்ற
உன் சோகக்குரல்,,,!
கனவுகளோடு
கல்விக்கற்ற உன்னை - ஒரு
பீடிக்கட்டுக்காக
உயிரெடுக்க பற்றவைத்து
சுவாச மண்டலத்தை
சுறுசுறுப்பாக்கிய _ அந்த
கயவர்கள் மனிதமிருகங்களே,,,!
 உன்னை இழந்து தவிக்கும்
உன்னை ஈன்றவர்களுக்கு
அநீதிக்கு சரியான
நீதி கிடைக்குமா,,,?
நிதியோடு முடியுமா,,,?
உனக்காக குரல் கொடுக்க
உன் தமிழ் உறவுகள்
காத்திருக்கின்றோம்,,,!

நாகை ஆசைத்தம்பி
கோவை