Thursday, October 1, 2020

வாடிக்கையானது வன்புணர்வு


 உலகமே பார்த்தக்காட்சி

பாபர் மசூதி இடிப்புக்கு

ஆதரமில்லயாம்


அந்தக்காலத்தில்~அந்த

இடத்திலிருந்த

ராமர் கோவிலுக்கு மட்டும்

ஆதாரம் இருக்கிறதாம்


இவர்கள் யாரும் மசூதியை இடிக்கவில்லை

ஏற்றுக்கொள்கின்றோம் உங்கள் நீதியை,,,,


இடித்ததுதான் யாரு,,,

கண்டுப்பிடிக்கலாமே,,


சீதைகளை

சின்னாப்பின்னமாக்கி

சீரழித்துவிட்டு

ராமனுக்கு கோவில்கட்டும்

நகைசுவையாளர்கள்


ராமராஜ்யம் நடப்பதாக

கூவிவிட்டு

காமராஜ்யம் நடத்தும்

மன்மதராஜாக்கள்


எழுதுவோம்,,பேசுவோம்,,

அறிக்கை விடுவோம்,,,

நாளையும் நாம் எழுத

ஒரு வன்புணர்வு நிகழ்வு

வராமலா போய்விடும்,,,?!



கவிமுகில் நாகை ஆசைத்தம்பி

Sunday, September 20, 2020

ஹைபுன் பழகலாம் வாங்க,,,


 ஹைபுன் என்பது கவித்துவமான ஒரு சிறிய கட்டுரை,  இது ஒரு கதையை அல்லது பின்னால் எழுதப்போகும் மூன்று வரிக்கவிதைக்கான கருவை முன்னால் உரைநடையில் விவரிக்கிறது. கட்டுரையின் இறுதியில் முத்திரை பதிக்கும் ஹைக்கூ ஒன்றும் அமையும். இக்கவிதை வடிவம்தான் தான் ஹைபுன் என்றழைக்கப்படுகிறது.


ஜப்பானை சேர்ந்த ஹைக்கூ கவிஞர்தான் பாஷோதான் ஹைபுன் கவிதையை முதன்முதலாக எழுதியதாக சொல்லப்படுகிறது இவற்றில் சமூக அவலங்களையும் அன்றாட நிகழ்வுகளையும் எளிதாக பதிவுச்செய்ய முடிகிறது செரிவான உரைவீச்சில் முரணான செய்திகளை இணைத்து ஹைக்கூவோடு முடிப்பதே ஹைபுன் கவிதையாகும்


அதாவது உங்களுக்கு புரிவதுப்போல எளிமையாக சொல்ல வேண்டுமானால் நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தமிழாசிரியர் ஒரு செய்யுளைச்சொல்லி விளக்கம் தருவார் அல்லவா அதுப்போலதான் பள்ளியில் செய்யுளைச்சொல்லி விளக்கம் தருவார்கள் இந்த ஹைபுன் கவிதை என்பதில் விளக்கம் சொல்லி அதன்பிறகு முடிவாக அவ்விளக்கத்திற்கு பொருந்தும்படி ஒரு ஹைக்கூ சொல்ல வேண்டும் இதுதான் ஹைபுன் என்பதாகும்


இதோ சில,,,உதாரணம்


பிள்ளைகள் யாவர்க்கும் மலையனூர் அங்காளம்மனுக்கு கெடாவெட்டி காதுகுத்துவது அம்மாவுக்கு வழக்கம் உயிர்பலி கொடுக்காதீர்கள் வேண்டுகோள் படித்தப்பிறகு விலைக்கு வாங்கி நேர்ந்து விடுவாள்,,, வந்தது உயிர்பலி தடைச்சட்டம் உறுதியோடு சொன்னால் ஆத்தாவுக்கும் எனக்கும் எந்த சட்டமும் மசுருதான்,,,


*கட்டளை இட்டது மடம்*

*கை மாறியது பணம்*

*காமாட்சி மடியில் பிணம்*


(மாய வரம் நூலில் அன்பாதவன்)


என் ஹைபுன் இதோ,,,


தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா காலில் விழுந்து அம்மா கெஞ்சுவார் குடிக்காதய்யா குடும்பம் வீணாப்போய் விடுமென்று,,, வெள்ளிக்கிழமை அம்மா மீது சாமி வந்து குறிச்சொல்லும்போது மட்டும் மாற்றாக அம்மா காலில் அப்பா விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்


*அனுதினமும் அடிவாங்கும்/*

*அம்மாவின் காலில் விழுவார் அப்பா/*

*அருள்வாக்கு சொல்லும்போது மட்டும்/*


பிறக்கும் எல்லோருக்குமே கருவறை சொந்தம்தான் இதில் அவனென்ன நம்மை கருவறையில் நுழைக்கூடாது என்று சொல்வதற்கு,,,அவனும் கருவறையில் இருந்தவன்தான் நாமும் கருவறையில் இருந்தவர்கள்


உயிர்களை கருவறையில்

சுமந்து செல்கிறாள்

பெண் தெய்வம்,,,!


லிமர்புன் என்பதும் கிட்டதட்ட இதே மாதரிதான் ஒரு  உரைநடை அல்லது கவிதைகளைச்சொல்லி கடைசியாக லிமரைக்கூவை பதிவிட்டால் அது லிமர்புன் எனப்படும்



~நாகை ஆசைத்தம்பி

Saturday, September 19, 2020

மோனைக்கூ கற்போமா,,,!


 மோனை என்பது கவிதையின் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.


எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.


ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.


ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்


உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.


ஒரு கவிதையில் முதல் வரியில் அ என்ற எழுத்துவந்தால் இரண்டாவது வரியில் அ என்ற எழுத்தே வரவேண்டுமென அவசியம் இல்லை அதே ஒலியுடைய அ,ஆ,ஐ,ஔ இந்த எழுத்துகளும் வரலாம் அதேப்போல ஒரு கவிதை இ என்ற எழுத்தில் ஆரபித்தால் அடுத்த வரி இ என்ற எழுத்தில் வர வேண்டுமென அவசியமில்லை அதே உச்சரிப்புள்ள இ.ஈ.எ.ஏ போன்ற எழுத்துகளும் வரலாம் அதேப்போல உ,ஊ ஒ,ஓ போன்ற எழுத்துகளையும் மோனையில் பயன்படுத்தலாம் ஆனால் அதே எழுத்து வந்தால் பார்க்கவே அழகாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்


மெய்யெழுத்திலும் மூன்று இனங்கள் உண்டு மோனையில் பயன்படுத்துவதற்கு ஞ்,ந் ஒரு இனம் ம்,வ்,ஒரு இனம் த்,ச்,என்பது ஒரு இனம் இப்படியும் பயன்படுத்தலாம்

இதேப்போலதான் எதுகைக்கூ என்பதும் ஒரு கவிதையில் இரண்டாவது எழுத்து மூன்று வரிகளிலும் ஒரே எழுத்தாக வந்தால் அது எதுகைக்கூ எனப்படும்

இல்கியம் என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது எதுகை,மோனை ஆகும்


அந்த மோனையை வைத்து ஹைக்கூ எழுதுவதே மோனைக்கூ எனப்படும் இதற்கு பெரிசா ஒன்றும் விளக்கம் தேவை இல்லை கீழ்காணும் என் கவிதையை பாருங்கள் புரியும்


இதோ என் மோனைக்கூ


குட்டாமலே

குனிந்துவிடுகிறது

குடிக்காரன் தலை,,,!


பருவநிலை மாற்றம்

பரிதாபமாக இருக்கிறது

பயிர்காய்ந்த வயல்கள்,


தண்ணீர் பற்றாக்குறை

தரிசாய் கிடக்கிறது

தமிழக விவசாயம்,


அரசியல்வாதிகள்

அடிக்கடி விடுகின்றனர்

அறைக்கூவல்,


~நாகை ஆசைத்தம்பி


Friday, September 18, 2020

ஐக்கூ அந்தாதி எப்படி எழுதுவது,,?


 




ஐக்கூ அந்தாதி


ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.



ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி ஆகும்


அந்தாதி என்றால் உங்களுக்கு புரியும்படி எளிமையாகச்சொன்னால்

கிராமங்களில் சொல்வார்கள் அவனுக்கு அந்தமும் இல்லை ஆதியும் இல்லன்னு,,, அதாவது

அந்தம்+ ஆதி இரண்டும் சேர்ந்து அந்தாதி எனப்படுகிறது அந்தம் என்றால் தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி என்றால் முதல் என்று அர்த்தமாகும் ஆதிமுதற்கடவுள் என்றுக்கூட சொல்வோமே அதைப்போல,, அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும்

 அந்தாதி என்பதை ஐக்கூ ரென்கா என்றும் அழைப்பார்கள் ஒரு ஹைக்கூ எந்த சொல்லில் முடிகிறதோ அதே சொல்லை பயன்படுத்தி அடுத்த ஹைக்கூவை தொடங்க வேண்டும்


இன்னும் எளிமையாக பார்ப்போமா,,,, அதாவது இலங்கை வானொலியில் பாட்டுக்கு பாட்டு என்று ஒரு நிகழ்ச்சி போடுவார்கள் பிறகு அது சென்னைக்கும் வந்தது லலிதாவின் பாட்டுக்கு பாட்டுயென்று அதில் ஒருவர் பாடும் போது மணி அடிக்கும் அவர் எந்த எழுத்தில் முடித்தாரோ அந்த எழுத்திலிருந்து அடுத்தவர் பாடவேண்டும் இதுப்போலதான் அந்தாதி இனி எழுதலாமா,,,,


இதோ,,,முனைவர் வே.புகழேந்தி அந்தாதி கவிதை


ஆசைத்தம்பியின் கவிதைகள்

அர்த்தம் நிறைந்தவை

இலக்கிய மணம் வீசிடும்


வீசிடும் தென்றலும்

இரசித்துச் செல்லும்

மயில்கள் ஆடி களிக்கும்


களிக்கும் பொழுதில்

கற்பனை வேகமாய் சுரக்கும்

கவின்மிகு கவிதைப் பிறக்கும்


பிறக்கும்போதே யாரும் கவிஞனில்லை /

எழுதிப் பழகினால்

எண்ணம் நிறைவேறும்


நிறைவேறும் நிச்சயம்

அவர்தம் இலட்சியங்கள்

வாழ்க எம்மான் ஆசைத்தம்பி

*****

அடுத்து கவிஞர் வெங்கடாச்சலம் பூவேந்தன் அந்தாதி பார்க்கலாம்


ஒன்றாய் கூடுகிறது

ஒரே சத்தம் போடுகிறது

ஒற்றுமையின் பலம்


பலம் உள்ளவன்

படையில் வெல்கிறான்

எதிலும் துணிச்சல்


துணிச்சல் பிறக்க

துணைக்கு வர வேண்டும்

தன்னம்பிக்கை

*****


அடுத்த கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் அந்தாதி கவிதை


நெடுந்தூரம் பயணம்

சற்றே இளைப்பாறுகிறது

கடலின் மேல் பறவை


பறவையின் கிறீச்சிடல்

உயர்ந்துக்கொண்டே வருகிறது

செல்பேசி கோபுரம்


கோபுரம் உச்சி

சரிந்து கீழே விழுகின்றது

மாலைநேர நிழல்


நிழல் தேடும் மனிதன்

கையில் ஏந்தியுள்ளான்

இரும்புக் கோடாரி


கோடாரி முனை

பட்டதும் தெறித்து விழுகிறது

மரப்பட்டையிலிருந்து புழு


புழு நெளியும் உணவு

தூக்கி எறிகிறான்

புழுவை மட்டும்

****

சமக்கால கவிஞர்களையும் உதாரணமாக எடுத்துக்கொண்டு பயன்படுத்திய கவிதையை வாசித்து இதேப்போல நீங்களும் எழுதுங்கள் கவிஞர்களே,,,


என்னுடைய ஐக்கூ அந்தாதி கவிதைகள் ;


சோறு குறைவுதான்

கூட்டத்தை அழைத்தது

காகம்,,,!


காகம் கரைந்தும்

வருவோர் யாருமில்லை

மரத்தடி பிச்சைக்காரன்,,,!


பிச்சைக்காரன் குரல்

காதில் கேட்பதில்லை

பணக்காரன் வீடு,,,!


வீடு காலியானது

அனாதையாய்

ஆணி,,,!


இப்படியாய் சுருக்கமாக சொன்னால் எந்த எழுத்தில் அல்லது வார்த்தைகளில் கவிதை முடிகிறதோ அதை முதல் எழுத்தாக அல்லது வார்த்தையாக வைத்து அடுத்த கவிதையை புனைவதுதான் அந்தாதி எனப்படுகிறது


நான் முடியும் வார்த்தைகளில் இருந்து தொடங்கியிருக்கிறேன் இதற்கு பெயர் ஐக்கூ அந்தாதி எனப்படும்


ஒரு திரைப்படத்தில்கூட அந்தாதி முறையில் புகழ்பெற்ற ஒரு பாடல் உண்டு (பாலச்சந்தர் படம்)


வசந்தக்கால நதிகளிலே

வைரமணி நீரலைகள்/


நீரலைகள் மீதினிலே

நெஞ்சிரண்டின் நினைவலைகள்/


நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்/


கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்/


இப்போது நன்றாக புரியுதா கவிஞர்களே,,,சரி


நீங்களும் முயற்சிக்கலாமே,,,


நாகை ஆசைத்தம்பி


Thursday, September 17, 2020

சென்ரியு எழுதலாம் வாங்க,,,


 


ஹைக்கூ கவிதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன சென்ரியு கவிதைகள்?இது ஒரு நவீன ஹைக்கூ

ஹைக்கூவில் மானுடம் பற்றி ஏதேனும் குறிப்பிருந்தால் அதை சென்ரியு என்று சொல்கிறார்கள்.இதன் இலக்கணம் என்ன தெரியுமா?ஆழமற்றது;வேடிக்கையானது.விடுகதை போன்றது.நகைச்சுவையானது;பொன்மொழி போன்றது.இவ்வகைக் கவிதைகளைத் திரட்டியவர் பெயர் காராய்ஹச்சிமோன் சென்ரியு
இவர் கி.பி 18நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார் அவரின் புனைப்பெயர் சென்ரியு அவரின் புனைப்பெயரிலையே இக்கவிதை அழைக்கப்படுகிறது

ஹைக்கூவுக்கான இலக்கணமும் கவித்துவமும் இல்லாமால் நகைச்சுவை உணர்வு மேலோங்கி ஒரு விசயத்தை கிண்டலாக சொல்லும் விசயமே சென்ரியுவாகும் நம்ம நண்பர்கள் சொல்வார்களே,,,,,,, நீ மனுசனே இல்லடான்னு  நிறுத்தி பிறகு தெய்வம் என்பார்களே அதுப்போலதான்,,,,

தமிழில் சென்ரியு வகைக் கவிதைகளை ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதி ''ஒரு வண்டி சென்ரியு''என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அதிலிருந்து நான் ரசித்த சில கவிதைகள்:

''தொகுதிதான்
முடிவாகவில்லை.
தோல்வி முடிவாகிவிட்டது.''
*****
''ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்.
ஐம்பது வாக்குகள்.''
******
''சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்.''
******
''குடித்தவன்
குடலுக்குள்ளும்
மயங்கவில்லை மது.''
******
''சண்டைக்கோழி
வென்றாலும் தோற்றாலும்
பிரியாணி.''
******

என் சென்ரியு கவிதைகள்

இரண்டு லாரிகள் மோதல்
முகப்பில்
அம்மன் துணை,,,!

ஏழையின் கூந்தலுக்கு
எண்ணெய் இல்லை
அம்மனுக்கு நெய் அபிஷேகம்

சரஸ்வதி குடியிருக்க
வாடகை எவ்வளவு
நாக்கில்,,,!

முழு அடைப்பு
காவல்துறை இயங்கியது
பேருந்துக்கு பாதுக்காப்பளிக்க,,,!

~நாகை ஆசைத்தம்பி

Wednesday, September 16, 2020

லிமரைக்கூ என்றால் என்ன,,,?


 



லிமரைக்கூ  கற்போமா நட்பூக்களே,,,


                          மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத்தொடையமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா அல்லது லிமரைக்கூ என்பர் . இதன் இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு.


லிமரிக் என்னும் ஆங்கில வடிவமானது அதில் ஹைக்கூவையும் இணைத்து லிமரைக்கூ எனப்படுகிறது


எளிமையாகச்சொன்னால் முதல்வரியின் கடைசி வார்த்தையும் கடைசிவரியின் கடைசி வார்த்தையும் எதுகை மோனையில் வர வேண்டும் இதுவும் ஹைக்கூ மாதரியேதான் எழுதிப் பழகுங்கள் எழுத்தாளன் என்பவன் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் தேடல் உள்ளவரையே நம்மால் இயங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்


 லிமரைக்கூ கவிதையை தமிழுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் இதோ ஒருசில லிமரைக்கூ


இரண்டால் பெருக்கப்படும் ஆயுள்/

காதலில் விழுந்தால் பொய்யும் நிஜமாகும்/

நெஞ்சில் கூவும் குயில்


~ முனைவர் வே.புகழேந்தி




இதோ என் லிமரைக்கூ,,,


மழைநேரம் திறந்த கடை

சூடுப்பிடிக்கிறது வியாபாரம்

மான்மார்க் குடை,,,!


வாங்கி குவித்தான் வட்டி

ஒரே பிரசவத்தில் பிறந்தது

இரண்டு பெண்குட்டி,,,!


~நாகை ஆசைத்தம்பி


Tuesday, September 15, 2020

பழமொன்ரியு பழகலாம் வாங்க,,,


 பழமொன்ரியு கவிதை என்பது ஹைக்கூவில் ஒருவகையாகும் இது பழமொழிகளை பயன்படுத்தி  எழுதுவதாகும் ஜப்பானிய சென்ரியு கவிதையின் இலக்கணமும் நம் தமிழ் மொழியின் இலக்கணமும் இணைந்து வருவதே பழமொன்ரியு ஆகும்,,,


வேடிக்கை,விளையாட்டு, கிண்டல்,கேளி இவைகள் கலந்துச் சொல்வதே பழமொன்ரியு ஆகும் எளிமையாக சொல்லவேண்டுமானால் இதுவும் ஹைக்கூ மாதரியேதான் நமது பழமொழிகள் முன்னெடுத்து அதை வச்சு சமூக நிகழ்வுளை கலாய்ப்பதுதான் பழமொன்ரியு ஆகும் இதோ சில,,


தான் ஆடாவிட்டாலும்

தன் தசை ஆடும் உடனே

கொழுப்பைக் குறைக்க வேண்டும்


கழுதை கெட்டால் குட்டிசுவர்

கெடாமல் இருந்தால் அதுக்கு

பாராளுமன்றமா,,?


~ஈரோடு தமிழன்பன்

ஒரு கூடைப் பழமொன்ரியு


கற்றது கையளவு

கல்லாதது உலகளவு

தோல்வியுற்ற மாணவன்


~ இரா . இரவி


இதோ என் பழமொன்ரியு கவிதைகள்


பட்டகாலிலே படும்

கெட்டகுடியே கெடும்

கஜா புயல்,,,!


நோய்விட்டுப்போக

வாய்விட்டு சிரிக்க முடியல

வாடகை வீடு,,,!


வளர்த்தக்கிடா

மார்பில் பாயுது

பால் குடிக்க,,,!


ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்

அம்மா அலட்டிக்கொள்ளவில்லை

வீட்டிற்குள் மிக்ஸி,,,!


நீர் இடித்து நீர் விலகாது

நீருக்காக விலகிக்கொண்டது

அரசியல் கூட்டணி,,!


அகல உழுவதைவிட

ஆழ உழுவதே மேலானாது

இயந்திர கலப்பை,,,!


ஐந்தில் வளையாதது

ஐம்பதில் வளைந்தது

அரசியல் கும்பிடு,,,!



~ நாகை ஆசைத்தம்பி