நூல் விமர்சனம்
******************
நூலின் பெயர்; ஏழிசை மீட்டும் வீணை
ஶீசெண்பகா பதிப்பகம் சென்னை
விலை70-00 பக்கம் 88
தொகுப்பாசிரியர்கள் ; ருத்ரா,இரா.ஹரிஹரன்
விமர்சனம் ; நாகை ஆசைத்தம்பி
ஏழிசை மீட்டும் வீணை தலைப்பு என்றாலும் அ(ஆ)றுசுவையாக ஆறு தனித்தனி தலைப்புகளில் ஆறு கவிஞர்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்
இரா,ஹரிஹரன்(வனம் தேடும் பறவை)
நிழலி (நதி நீந்தும் அருவிகள்)
மணிகண்டன்(சிறகு தந்த வானம்)
ருத்ரா(காற்சிலம்போசை)
சுகி(சன்னல் திறக்கும் தென்றல்)
ச.சாம்யாபேஸ்(வீணை மீட்டிய கனவுகள்)
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்திருக்கிறார் முனைவர் விசயராகவன் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவர்கள்,,
காலக்கடலில் நமக்கு வழி காட்ட அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் என்றார் எட்வின் பி விப்பிள் என்ற அறிஞர்,உண்மைதான் வாசிப்பை நேசிப்பவர்களுக்கே இதன் பொருள் புரியும் காசுக்கொடுத்து ஒரு நல்ல புத்தகத்தை வாங்குவதற்கு ஈடாக இவ்வுலகில் வேற எதையுமே வாங்க முடியாது என்றார் ஒரு அறிஞர் அப்படிப்பட்ட நல்ல நூல்களை உருவாக்கி இச்சமூகத்திற்கு நாம் கொடுத்தோமானால் நமக்கு பிறகும் பேசப்படும் நம் பெயரும் வரலாற்றில் நிலைக்கும்,,, வரலாறு முக்கியமல்லவா,,,? என்றோ வாழ்ந்த வள்ளுவரையும்,இளங்கோவையும், கம்பரையும் நாம் எப்படி தெரிந்துக்கொண்டோம் அவர்களின் படைப்புகள் மூலம்தானே அதனால் அதுப்போன்ற நல்ல படைப்புகளை நாமும் கொடுக்க வேண்டுமென்ற சிந்தனையோடு சிறகடித்து பறந்திருக்கின்றது ஆறு கவிக்குயில்கள் அக்குயில்கள் மீட்டிய ஏழிசையை இனி உங்கள் ரசனைக்கு,,,,
இத்தொகுப்பில் ஹரிஹரன் அவர்களின் கவிதை முதலில் இடம்பெறுகின்றது அவரது கோபம் என்ற தலைப்பிலான கவிதை நகைச்சுவையாக இருந்தாலும் அது பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென்ற சிந்தனையை விதைக்கிறது
டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்த
நடத்துனரின் மேல் கோபம்
ஓட்டுனருக்கு,,,
ஒவ்வொருத்தருக்காக என்றைக்கு
கொடுத்து முடிப்பது,,?
ஒரே நேரத்தில் அனைவருக்கும்
டிக்கெட் கொடுத்தார் ஓட்டுனர்,,!
அடுத்து ஒரு கவிதை நவீனதேசம் தலைப்பிலானது இதுவும் ஹரிஹரன் கவிதைதான் மிக அற்புதமான சமூகச்சிந்தனை கவிதை
பேச்சுரிமை கொடுக்கப்படும்
ஆனால் பேசக்கூடாது
எழுத்துரிமை கொடுக்கப்படும்
ஆனால் எழுதக்கூடாது
கேள்வியுரிமை கொடுக்கப்படும்
ஆனால் கேட்கக்கூடாது
வாழ்வுரிமை கொடுக்கப்படும்
ஆனால் வாழக்கூடாது
இது நவீனதேசம்,,,!
இன்றைய தேசத்தின் நிலையை அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறார் சபாஷ் ஹரிஹரன் வாழ்த்துகள்
ஆனாலும் விலைமாதர் என்ற கவிதையை தொகுப்பில் தவிர்த்திருக்கலாம் ஹரிஹரனுக்கு சமூகச்சிந்தனை கவிதைகள் சிறப்பாக வருகிறது சாதி ஒதுக்கல் என்ற கவிதையில் நம்மை ஓங்கி அறைகிறார்
மொட்டை அடித்து
ஒதுக்கித் தள்ளப்பட்டன
அனைத்து சாதி
மயிர்களும்,,,!
மிக அருமையான சாடல் ஹரிஹரன் சாதி பெருமை பேசுபவர்களுக்கும் சாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும் செருப்படி
தொடருங்கள் ஹரிஹரன்
அடுத்து நிழலி தொடர்கின்றார்
தினமும் நாம் காணும் பேருந்து மற்றும் தொடர்வண்டி காட்சிகளை கவியாக்கியுள்ளார் அழகாக,,, உறவு என்ற தலைப்பில்,,,
பேருந்தில் செல்லும்
யாரோ ஒருவரை
சொந்தமாக்கிக் கொள்கிறது
குழந்தைகள்
டாட்டா காட்டி,,,
உண்மைதானே,,,
அடுத்து வரும் கவிதையில் நிழலி மட்டும் யோசிக்கவில்லை வாசிப்பவர்களையும் யோசிக்க வைத்துள்ளார் செய்தி என்ற தலைப்பிலான கவிதையில்,,
ஒவ்வொரு முறையும்
அழகிகள் கைது
பாவம் அழகர்களுக்கு
இடமே கிடைப்பதில்லை,,,
ஆமா,,,,அந்த அழகிகளைத்தேடிச்சென்ற ஆண் அழகர்கள் என்னவானார்கள்,,,, யோசிக்க வைப்பதுதானே படைப்பாளியின் வேலை அதை சரியாக செய்திருக்கிறார்
அடுத்து நிலை என்ற தலைப்பிலான கவிதையில் நம்மையும் நிலை குலைய வைக்கிறார்
விதவிதமாக சமைத்துவிட்டு
பழைய சோற்றுக்காக
காத்திருக்கிறாள்
வேலைக்காரி
மனதை ரணமாக்கும் சிறப்பான கவிதை நிழலி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
அடுத்து மணிகண்டன் நம்மை மயக்க வருகின்றார் கவி வரிகளில்,,, விதை என்ற கவிதையில் விதைகளை பிணம் என்ற பதத்தில் சொல்லியிருக்கிறார் அதிலிருந்து நான் மாறுபடுகிறேன் விதை என்பது உயிரை சேமித்து வைக்கும் கருவறை என்பதுதான் உண்மை அவரின் பார்வை நெருடலாக இருக்கிறது விதைகளை விதைக்கப்பட்ட புரட்சி என்று வீரியமாக சொல்லியிருக்கலாம் புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் என்ற வாசகத்தைக்கூட நீங்கள் கேட்டிருக்கலாம் எனவே இக்கவிதையில் நான் மாறுப்படுகிறேன் இதோ உங்களுக்காக அந்த கவிதை
புதைக்கப்பட்ட பிணம்
உயிர்த்தெழுகிறது
துளிர்விட்டப்போது,,,
அடுத்து ஒரு கவிதையில் நாம் தினமும் காணும் காட்சியை அழகாக தனிவழி என்ற தலைப்பில் பதிவு செய்கிறார் நான்கூட ரஜினி வழியோ என நினைத்தேன் அதுவல்ல இது வேற வழி,,,
தனக்கென்று தனிபாதை
உருவாக்கியவர்களே
தமிழர்கள்
வேகத்தடைகளில்,,,!
உண்மைதானே வேகத்தடைகளை நெருங்கும்போது சைடில் புகுந்து போவது சர்வ சாதாரணமாகிவிட்டது நல்ல சிந்தனை மணிகண்டன் வாழ்த்துகள்,,,
அடுத்து இத்தொகுப்பின் ஆசிரியர் ருத்ரா கவிதைகளை காணலாம் மதுவிலக்கு என்ற தலைப்பிலான கவிதையில் இன்றைய எதார்த்தத்தை மிக அழகாக பதிவு செய்கிறார்
மது அருந்திவிட்டு
தன் பேச்சைத் தொடர்ந்தார்
மது விலக்கை அமுல்படுத்தக்கோரி,,,!
நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகின்றார் சிறப்பு ருத்ரா அவர்களே,,,
அடுத்து கௌரவம் என்று ஒரு கவிதை இதை வாசிக்கும்போது கொரோனா காலத்து நிலை ஞாபகத்தில் வந்துப்போகிறது லாக்டவுன் வேலை இல்லை சாப்பிட வழியில்லை என எல்லோரும் சொன்னார்கள் ஆனாலும் எல்லோரும் ஆன்லைனில்தான் இருந்தார்கள் இதுதான் கௌரவம் என்பதோ இதோ ருத்ரா கவிதை
வாடகை வீட்டில்
இருந்தபடி
சொந்தமாக கார்
வாங்கினான்
நிப்பாட்ட
இடமின்றி,,,!
மிகச்சிறப்பு ருத்ரா உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துகள் பல,,
அடுத்து தேவக்கோட்டை சுகி சன்னல் திறக்கும் தென்றலாய் வருடுகின்றார் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற கவிதையில்
அன்றாடச் செய்திகள்
அரிதாரம் பூசிவரும்
நாளிதழ்களை
அலுக்காமல் சலிக்காமல்
கொண்டு சேர்க்கும்
ஏழைச் சிறுவன்
அரை வயிற்றுக் கஞ்சிக்காக,,,
ஆமா,,,நானும் தெரியாமல்தான் கேட்கிறேன் இவர்களை எல்லாம் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச்சட்டம் ஒன்னும் செய்யாதோ,,, நல்ல சிந்தனை சுகி
அடுத்து விவசாயம் காப்போம் என்ற கவிதையில் வார்த்தை ஜாலத்தில் நம்மை வசீகரம் செய்கிறார்
விளைநிலம் வறுமையில்
விலை நிலமாகிப்போனது
விதி வசத்தால்,,!
உண்மைதான் நிலம் இல்லாத பணக்காரன் நிம்மதியாக வாழ்கிறான் நிலம் வைத்து உழைப்பவன் வங்கி வாசலில் கடனுக்கு போராடுகின்றான்
இன்னும் தீண்டாமை, கலாச்சார சீரழிவு, நவீன மகப்பேறு,போன்ற கவிதைகளும் மிக அருமையாக உள்ளது அருமை சுகி அருமை,,
அடுத்து சாம் யாபேஸ் கவிதைகளை காண்போம் இவருடைய வாழ்க்கை என்ற தலைப்பிலான ஒரு கவிதையை வாசிக்கும்போது என் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது உணவு தேவைகளுக்காக ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியது கட்டாயம் மட்டுமல்ல இயற்கையின் நீதியும்கூட,,, பாம்பு தவளையை துரத்துகின்றது தவளை பூச்சியை துரத்துகின்றது பூச்சி எதை துரத்துகின்றதோ,,,? இந்நிலையை பதிவுசெய்தவிதம் சிறப்பு
பாம்பு விழுங்கிய
தவளையின் வயிற்றில்
பாதி செரித்த பட்டாம்பூச்சி
எத்தனை வேதனை என்றாலும் இதுதான் இயற்கை பட்டாம்பூச்சி வயிற்றில் எந்த எறும்பு இருக்கிறதோ யாருக்கு தெரியும்,,,?!
அடுத்து கூலியில்லா பணியாள் தலைப்பிலான ஒரு வித்தியாசமான சிந்தனை கவிதை
நாள் கூலியும் கேட்டதில்லை
வாரச் சம்பளமும் கேட்டதில்லை
புல் மேய்ந்த கன்றுக்குட்டிகள்
உண்மைதானே,,, புல் முளைத்த இடத்தை சுத்தம் செய்வதற்கு கூலியே கேட்காமல் என்கடன் பணிச்செய்து கிடப்பதே என்றவாறு செய்கிறது என்பது நகைச்சுவையாக இருந்தாலும் இது ஒரு வித்தியாசமான நக்கல் நையாண்டி,எள்ளல் இந்தத்தொணியில் இருக்கிறது வாழ்த்துகள் சாம்,,,
இந்த தொகுப்பில் பெரும்பாலன கவிதை சிறப்பாக இருந்தாலும் அனைத்தையும் பதிவுசெய்ய இயலாமைக்கு வருந்துகிறேன் இக்கவிஞர்கள் தொடர்ந்து இதுப்போன்ற நூல்களை இச்சமூகத்திற்கு தருவார்கள் என்ற நம்பிக்கையில்,,,
வாய்ப்புள்ள நண்பர்கள் வாங்கி வாசிக்கலாமே,,,!
நான் இதுவரை வாசிக்காத புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னை சந்திப்பவனே என் தலைச்சிறந்த நண்பன் என்றார் ஆபிரகாம் லிங்கன்
இன்று அவர் உயிரோடு இருந்தால் இந்த புத்தகத்தோடு சென்று சந்தித்திருப்பான் இந்த விமர்சனத்தை எழுதிய உங்கள்
நாகை ஆசைத்தம்பி
எழுத்தாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்&கலைஞர்கள் சங்கம்
கோவை
8754879990
No comments:
Post a Comment