Monday, November 30, 2020

இறகைத்தேடும் சிறகுகள் பன்மொழி ஹைக்கூ நூல்

 இறகைத் தேடும் சிறகுகள்!

 நூல் ஆசிரியர் : கவிஞர் நாகை ஆசைத்தம்பி


நூல் வெளியீடு : கவிக்குடில், கோவை.  அலைபேசி : 87548 79990


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


*****


      ‘இறகைத் தேடும் சிறகுகள்’ நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. பெற்றோரைத் தேடும் குழந்தைகள் என்றும் பொருள் கொள்ளலாம். நூல் ஆசிரியர் கவிஞர் நாகை ஆசைத்தம்பி அவர்களின் 16ஆவது நூல். ஹைக்கூ வரிசையில் 4ஆவது நூல். இவரது முந்தைய ஹைக்கூ நூல்களுக்கு மதிப்புரை எழுதி உள்ளேன்.


      இந்த நூலின் புதுமை என்னவென்றால் பன்மொழி ஹைக்கூ நூல் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என 4 மொழி ஹைக்கூ கவிதைகளும் ஒரே நூலில் வந்துள்ளன. 4 மொழிகளில் ஹைக்கூ கவிதைகள் வந்துள்ள முதல் நூலும் இதுவே. 4 மொழிகளும் நூலாசிரியருக்குத் தெரியுமா? என்பது தெரியவில்லை. தெரிந்து இருக்கலாம். அல்ல பிறமொழி மட்டும் மொழிபெயர்ப்பாளரிடம் பெற்று படைத்து இருக்கலாம்.


      உலகின் முதல் மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம், வடஇந்திய மொழி இந்தி, அண்டை மாநில மொழி மலையாளம் – நான்கு மொழிகளிலும் ஹைக்கூ யுத்தியுடன் மூன்று வரிகளிலேயே படைத்து இருப்பது சிறப்பு. தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழி மட்டும் நான் அறிந்தது. எனவே இருமொழி சிறப்பை மட்டும் எடுத்து இயம்பி உள்ளேன். பதச்சோறாக சில ஹைக்கூ கவிதைகள்.


பாலுக்கு அழும் குழந்தை

குடம் பாலை குடிக்கிறது

சாமி சிலை


BABY CRYING FOR MILK

THE JUG DRINKS MILK

GOD STATUE


இந்த ஹைக்கூவின் மூலம் பகுத்தறிவு சிந்தனையை விதைத்து உள்ளார். ஏழைக்குழந்தை பசியால் வாடும் போது, கடவுள் சிலைக்கு பாலாபிசேகம் செய்வதில் பயனில்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். ஆங்கில மொழிபெயர்ப்பும் பொருத்தமாக உள்ளது.


நிறங்களை

நகலெடுப்பதில்லை

நிழல்கள்


COLORS

NOT COPYING

SHADOWS


நிழல் என்பது கருப்பாகவே இருக்கும். நிழல் கண்ணாடி போல வண்ணத்தை எதிர்பார்க்க முடியாது. காட்சிப்படுத்தல் ஹைக்கூவின் மூலம் சிந்திக்க வைத்துள்ளார்.


அம்மா தாயே என்றார் பிச்சைக்காரர்

அவசரமாய் வந்து போட்டேன்

கதவின் தாழ்பாள்.


SAID THE MOTHER BEGGER

I SAME IN A HURY

DOOR LATCH


ஹைக்கூ கவிதையில் மூன்றாவது வரி எதிர்பார்த்தது இல்லாமல் வேறாக இருக்கும். அவசரமாக வந்து பிச்சை போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் கதவிற்கு தாழ்பாள் போடுகிறார்கள். இன்றைய மனிதர்களும் பலர் பிச்சை போட மனமின்றியே தன்னல வாழ்வே வாழ்கின்றனர்.


தொழிற்சாலை புகை

வேகமாய் பரவுகிறது

தொற்று நோய்கள்


INDUSTRIAL POLLUTION

SPEREADS FAST

INFECTIOUS DISEASES


இந்த ஹைக்கூ கவிதையினைப் படித்தபோது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமே நினைவிற்கு வந்தது. அநியாயமாக 13 உயிர்கள் பலியானது. ஒருவழியாக மூடப்பட்ட நச்சுஆலை, இன்னும் உச்ச, உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதும் திறக்க முயற்சி செய்வதும் வேதனை.


இரண்டு லாரிகள் மோதல்

இரண்டின் முகப்பிலும்

அம்மன் துணை.


TWO TRUCKS COLLIDE

ON THE FACE OF BOTH

GODDESS SUB


அம்மன் துணை என்று எழுதி இருந்தாலும் கவனக்குறைவாக ஓட்டினால் விபத்து நடக்கத்தான் செய்யும் என்ற விழிப்புணர்வு விதைக்கும் விதமான ஹைக்கூ நன்று. எளிமையான ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தி இருப்பது எளிதாக புரிந்துகொள்ள உதவுகின்றது.


நோய் விட்டுப் போக

வாய் விட்டு சிரிக்க முடியல

வாடகை வீடு!


GET SICK

CAN’T LAUGH OUT

RENTED HOUSE


உண்மை தான். வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. எப்போது வேண்டுமானாலும் காலியாக்கச் சொல்வார். வாடகை கூட்டிக் கொடு என்பார். ஆணி அடிக்காதே என்பார். சொந்த வீட்டின் மகிழ்ச்சி, வாடகை வீட்டில் இருப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து வடித்த ஹைக்கூ நன்று.


உடைந்த பலூனுக்கு

இரங்கல் தீர்மானமோ

குழந்தைகள் கண்ணீர்


FORA BROKEN BALLOON

CONDOLANCE RESOLUTION

CHILDREN TEARS


கையில் வைத்திருக்கும் பலூன் உடைந்து விட்டால் குழந்தை உடன் அழத்தொடங்கி விடும். சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். குழந்தையின் அழுகையை இரங்கல் தீர்மானம் என்று சொல்வது நல்ல சொல்லாட்சி. ஆங்கில ஹைக்கூவும் எளிதில் புரியும் வண்ணம் எளிமையாக இருக்கின்றன, சிறப்பு.


கட்டி முடிந்தது வீடு

முடியாமலே இருக்கிறது

அசலுக்கான வட்டி!


THE HOUSE IS FINISHED

IT IS IMPOSSIBLE

INTEREST ON THE ORIGINAL


இதில் ORIGINAL என்ற சொல்லிற்குப் பதிலாக CAPITAL என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். கொரோனா காலத்தில் வருமானமின்றி மக்கள் தவித்தப்போது மாதத்தவணை கட்டமுடியாமல் வேதனைப்பட்டனர். வட்டிக்கு வாங்கி வீடு கட்டுவதை விட வாடகை வீடே மேல் என்று உணர்த்தி விட்டனர். தவணை கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு தற்போது கூட்டு வட்டிப் போட்டு வசூல் செய்து வாட்டி வருகின்றனர். மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் வாடி வருகின்றனர். ஆயிரம் கோடிகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்-களை தப்பிச்செல்ல விமானத்தில் வழியனுப்பி வைக்கின்றனர், அவல நிலை.


முகம் தெரியாவிட்டாலும்

மனம ரணமாகிறது

அவசர ஊர்தியின் அலறல்!


EVEN IF THE FACE IS NOT VISIBLE

THE MIND DIES

THE SCREAM OF AN AMBULANCE


அவசர ஊர்தியின் சத்தம் கேட்டால் மனதிற்கு படபடப்பு வந்துவிடும். வழியில் சென்று கொண்டு இருந்தால் ஊர்திக்கு வழி விட்டுவிட்டு உள்ளே இருப்பவர் முகம் தெரியாவிட்டாலும் யாரோ, எவரோ? என்ன ஆனதோ? உயிருக்கான போராட்டம், உயிரோடு போராட்டம். இப்படி பல நினைவுகள் வந்து இளகிய மனம் ரணமாகி விடும். அந்த மனிதாபிமானத்தை ஹைக்கூ ஆக்கி உள்ளார்.


4 மொழிகளில் வந்துள்ள முதல் ஹைக்கூ நூல். ஆசிரியருக்கு பாராட்டுகள்.


No comments:

Post a Comment